மதுரையில் முன்னாள் அமைச்சரின் ரூ.பல கோடி கொள்ளை விவகாரம்; போலீசார் விசாரணை
மதுரையில் முன்னாள் அமைச்சரின் ரூ.பல கோடி கொள்ளை விவகாரம்; போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 25, 2025 08:09 AM

மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் பினாமி மூலம் பதுக்கி வைத்திருந்த ரூ.பல கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலையீட்டால், இவ்விவகாரம் குறித்து போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
மதுரை விளாங்குடியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் ஜூன் 21ல் பணம் கொள்ளை போனது. அந்த பணம் முன்னாள் அமைச்சருடையது என்பதால் அவரே நேரடியாக வந்து விசாரித்தார். சட்டசபை தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த அந்த பணம் கொள்ளை போனது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்தால் 'கட்சிக்கு ஏன் நிதி தரவில்லை' என கேள்வி கேட்கக்கூடும் என்பதால் செய்வதறியாது தவித்தார்.
'சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்' என உணர்ந்தவர், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறினார். பிரச்னையின் வீரியத்தை புரிந்துக்கொண்ட அந்த பிரமுகர், 'அடாவடி'க்கு பெயர் போன இரு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதேசமயம் போலீஸ் உயர் அதிகாரிக்கும் 'இவ்விஷயம் குறித்து ரகசியமாக விசாரித்து நடவடிக்கை எடுங்கள்' என உத்தரவிடப்பட்டது.
இதைதொடர்ந்து பினாமி நபரிடம் போலீசார் விசாரித்தபோது கொள்ளை போனது கணக்கில் காட்ட முடியாத பல கோடி ரூபாய் எனத் தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்யாமல் விசாரித்தால், நாளை தங்களுக்கு பிரச்னையாகிவிடும் எனக்கருதிய போலீசார், பினாமி நபர் தொழில் செய்யும் வரவு செலவுகளை கணக்கிட்டு ரூ.2.80 கோடி கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சரின் உறவினருக்கு பழக்கமான ஆரப்பாளையம் நபருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்தது. கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அந்நபர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் சில வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலும் உண்டு என்கின்றனர் போலீசார்.
அவர்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர், தனது குடும்பத்தினர் பெயரில் சில தொழில்களை செய்து வருகிறார். அனைத்துக்கும் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை. கட்சி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் கிடைக்கும் வருமானத்தை பினாமி பெயர்களில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்து வந்துள்ளார்.
அதில் ஒன்றுதான் விளாங்குடி அபார்ட்மென்ட் வீட்டில் கொள்ளை போனது. இது திட்டமிட்டே நடந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் கிடைத்துள்ளன. அவரது கட்சியினர் ரூ.150 கோடி, ரூ.30 கோடி கொள்ளை போனதாக வேண்டுமென்றே தகவல் கசியவிட்டனர். ஆனால் ரூ.10 கோடி கொள்ளை போயிருக்க வாய்ப்புள்ளது. கொள்ளையில் தொடர்புடையதாக சந்தேகிக்கும் சிலரிடம் விசாரித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.
நமது நிருபர்