ADDED : ஜன 13, 2024 11:42 PM
திருப்பத்துார்:''லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் நான்கு முனை போட்டி இருக்கும்,'' என, ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், ஹிந்து மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:
தமிழக அரசு, ஹிந்து பண்டிகைகளுக்கு இலக்கு வைத்து, மது விற்பனை செய்கிறது. விவேகானந்தர் பிறந்த நாளன்று, தமிழக அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
சமீப காலமாக எங்கு பார்த்தாலும், கருணாநிதி நுாற்றாண்டு விழா என, தங்களுடைய குடும்ப தலைவருக்கு, கட்சி தலைவருக்கு, அரசு பணத்தில் விழா எடுக்கின்றனர்.
தமிழகத்தை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் தான் காப்பாற்ற வேண்டும். அதற்காக, நேற்று முதல், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், தமிழகம் முழுதும், 'சேவ் தமிழ்நாடு; டிஸ்மிஸ் டி.எம்.கே.,' என்ற, இயக்கத்தை ஜனநாயக அடைப்படையில் துவங்கி நடத்தி வருகிறோம். லோக்சபா தேர்தலில், மோடியின் வேட்பாளருக்கு, எங்களது ஆதரவு இருக்கும். நாடு முழுக்க, 'காங்., இல்லாத பாரதம்; கழகங்கள் இல்லா தமிழகம்' உருவாக வேண்டும்.
தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் நாம் தமிழர் என, நான்கு முனை போட்டி தான் வரப்போகிறது.
நாம் தமிழர் மற்றும் பல கட்சிகளை சேர்ந்தவர்கள், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் நடக்கிறது.
இவ்வாறு அர்ஜுன் சம்பத் பேசினார்.

