பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் இலவச மேமோகிராம் சோதனை
பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் இலவச மேமோகிராம் சோதனை
ADDED : ஜன 18, 2024 10:44 PM
சென்னை:சென்னையில் இன்று துவங்கும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு, இலவச மேமோகிராம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், மூன்று நாட்கள் நடக்கும் பன்னாட்டு மருத்துவ மாநாடு, இன்று துவங்குகிறது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 11,000 டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில், மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், மருந்தகம் ஆகியவை குறித்து, பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவம் தொடர்பான மாநாடு நடத்தப்பட்டதில்லை. முதல் முறையாக தமிழகம் நடத்துகிறது. மூன்று நாட்கள் மாநாட்டில், பல்துறை நிபுணர்கள் பங்கேற்கும் 27 சிறப்பு அமர்வுகள், ஐந்து குழு விவாதம், 50 இணை அமர்வுகள் இடம் பெறுகின்றன.
பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் ஒரு அமர்வு உள்ளது. இதில் பங்கேற்கும் பெண்களுக்கு, 'மேமோகிராம்' பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
மருத்துவ பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவத்தின் எதிர்காலம் என்ற கருப்பொருளில், 600 அறிவியல் ஆராய்ச்சிகளை வெளியிட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

