சட்டசபையில் 12ல் கவர்னர் உரை வரும் 19ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
சட்டசபையில் 12ல் கவர்னர் உரை வரும் 19ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
ADDED : பிப் 01, 2024 08:16 PM
சென்னை:தமிழக சட்டசபை கூட்டம், வரும், 12ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10:00 மணிக்கு, கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார்; 19ம் தேதி 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்கும். கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும் கவர்னர் உரையாற்றினார்.
'உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை, சபைக்குறிப்பில் இடம் பெறாது' என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த கவர்னர், கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
அதன்பின் இரு தரப்பினருக்கும் இடையே, அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. எனவே, இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, கவர்னர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது, வரும் 12ம் தேதி சட்டசபையில் கவர்னர் உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபை கூட்டத்தை, 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, தலைமை செயலக வளாகத்தில் உள்ள, சட்டசபை கூட்டரங்கில், கவர்னர் கூட்டியுள்ளார். அரசியல் சட்டப்படி, கவர்னர் ரவி அன்று உரையாற்ற உள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, 19ம் தேதி காலை 10:00 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.
மறுநாள் 20ம் தேதி, 2024 - 25ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 21ம் தேதி, 2023 - 24ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான இறுதி மானிய கோரிக்கை அறிக்கையை, சட்டசபையில் அளிக்க உள்ளார்.
கவர்னர் உரை மீதான விவாதம், பட்ஜெட் மீதான விவாதம் ஆகியவற்றுக்கு, எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து, அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும்.
எம்.எல்.ஏ.,க்களுக்கு இருக்கை ஒதுக்கும் விவகாரத்தில், சபாநாயகரை நீதி மன்றம் கட்டுப்படுத்தாது. எம்.எல்.ஏ.,வை எங்கு அமர வைப்பது என்ற முழு உரிமை, சபாநாயகருக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.

