தவறான செய்திகள் வேண்டாம் ஊடகங்களுக்கு அரசு கோரிக்கை
தவறான செய்திகள் வேண்டாம் ஊடகங்களுக்கு அரசு கோரிக்கை
UPDATED : ஜன 21, 2024 09:47 AM
ADDED : ஜன 21, 2024 02:07 AM

புதுடில்லி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ள நிலையில், இது தொடர்பாக சரிபார்க்கப்படாத, மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும், மத ரீதியில் பிளவு ஏற்படுத்தும் வகையிலான பொய் செய்திகள் வெளியாவதை தடுக்கும்படி, ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை எனப்படும் கும்பாபிஷேக விழா, நாளை நடக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
அறிவுறுத்தல்
இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கும்பாபிஷேகத்தையொட்டி, நாடு முழுதும் களைகட்டிஉள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமர் கோவில் குறித்தும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும், அழைப்புகள் யார் யாருக்கு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பல போலி தகவல்களும் வெளியாகிஉள்ளன.
குறிப்பாக சமூக வலைதளங்களில், பல பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
நன்கொடைகள் வசூலிப்பதாகவும், ராமர் கோவில் பிரசாதம் விற்பதாகவும், பல போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பத்திரிகைகள், தனியார் 'டிவி' சேனல்கள், செய்தி இணையதளங்கள், சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை, பல அறிவுறுத்தல்களை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், சில சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலி செய்திகள் வெளியாகின்றன.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் இது தொடர்பான செய்திகள், படங்கள் பரப்பப்படுகின்றன.
இது போன்றவை, மத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. இதனால், பத்திரிகைகள், தனியார் டிவி சேனல்கள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தவறான அல்லது போலியான செய்திகள், நாட்டில் மத நல்லிணக்கம் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தன்மையுடைய எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதையோ அல்லது ஒளிபரப்புவதையோ தவிர்க்க வேண்டும்.
சமூக வலைதளங்களும் இதுபோன்ற தகவல்களை பதிவேற்றம் செய்வதை, காட்சிப்படுத்துவதை, வெளியிடுவதை தடுக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறை சட்டம், பிரஸ் கவுன்சில் சட்டம் ஆகியவற்றின் கீழ், இந்திய பத்திரிகை கவுன்சில் வகுத்துள்ள நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
சமூக வலைதளம்
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வகுத்துள்ள நெறிமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட, டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த விதிகள் மற்றும் சட்டங்களின்படி, துல்லியமற்ற, ஆதாரமற்ற, தவறாக வழிநடத்தும் அல்லது சிதைந்த உள்ளடக்கத்தை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஜாதி, மதம் அல்லது சமூக உணர்வுகளை துாண்டும் வகையிலான, ஆட்சேபனைக்குரிய, ஆத்திரமூட்டக் கூடிய, தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான செய்திகள், கருத்துக்களை வெளியிடக் கூடாது; ஒளிபரப்பக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

