பிரதமர் வழித்தட பாதுகாப்பு பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பு
பிரதமர் வழித்தட பாதுகாப்பு பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பு
ADDED : ஜன 18, 2024 10:39 PM
சென்னை:கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி வரும் வழியில், பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
இவற்றில், நாடு முழுவதும் உள்ள வீரர்கள் பங்கேற்கின்றனர். இதைச் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
விழா அரங்கு அமைத்தல் உள்ளிட்ட கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை செய்வது வழக்கம்.
ஆனால், இம்முறை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பணிகளை துவங்கிவிட்டு முடிக்க முடியாமல் திணறி வருகிறது. இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது.
விழாவை துவக்கி வைக்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ்., அடையாறு ஹெலிபேட் தளத்திற்கு, ஹெலிகாப்டரில் பிரதமர் வருகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில், நேரு விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.
பிரதமர் வரும் வழியில், தேவையான பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து, பொதுமக்கள் ஓரமாக நின்று வரவேற்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, சென்னை மாநகர போலீஸ் வாயிலாக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கேட்கப்பட்டு உள்ளது.
கடைசி நேரத்தில் கேட்டால் எப்படி செய்ய முடியும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
எனவே, பொதுப் பணித் துறையை அணுகி, இப்பணிகளை செய்து தரும்படி, போலீஸ் வாயிலாக கேட்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அதிகாலையில் இருந்து மதியம் 1:00 மணிக்குள், நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வரை, 3 கி.மீ., துாரத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

