டில்லியில் கை குலுக்கல் தமிழகத்தில் வசைபாடல் முதல்வரை விளாசும் சீமான்
டில்லியில் கை குலுக்கல் தமிழகத்தில் வசைபாடல் முதல்வரை விளாசும் சீமான்
ADDED : ஜூன் 15, 2025 02:55 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
தாய்மொழி வழிபாடு என்பது, ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமை. ஆனால், அதற்காக போராட வேண்டிய நிலையில்தான் தமிழகம் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் திராவிட ஆட்சியாளர்கள், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் முழுமையாக எடுக்கவில்லை.
எல்லாவற்றையும் போல, இதையும் ஒரு பேசுபொருளாக மட்டும் வைத்துள்ளனரே தவிர, தீர்வு ஏற்படுத்தவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறோம் என, தங்களை தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர்.
இயேசுநாதருக்கு தமிழில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. தமிழ்மொழியில் இல்லாத நல்ல சொல், வேறு மொழியில் இல்லை என்பதை கிறிஸ்துவர்கள் உணர்ந்துள்ளனர்.
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும். நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளதே தவிர குறையவில்லை. ஆனால், கேளிக்கை வரி 4 சதவீதம் குறைக்கப்படுகின்றதாம். அதனால், யாருக்கு என்ன பயன்?
மொத்த திரைத்துறையையும், தி.மு.க., மேலிடத்தில் இருப்போரே கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதனால், அவர்களை தவிர வேறு யாரும் படம் எடுத்து வெளியிட முடியாத நிலையில் உள்ளனர். மொத்த திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, வேறு யாருக்கும் ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கொடுப்பதில்லை.
அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் பாலியல் தொல்லையில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில், முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதன்பின், டில்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியின் கையைப் பிடித்துக்கொண்டு பேசுகிறார். தமிழகம் திரும்பியதும், பிரதமர் மோடியை எதிரி என சொல்லி வசைபாடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.