தே.மு.தி.க., சுதீஷ் வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
தே.மு.தி.க., சுதீஷ் வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
ADDED : செப் 18, 2025 01:22 AM
சென்னை:மாநில நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில், தே.மு.தி.க.,வின் பொருளாளர் எல்.கே.சுதீஷுக்கு சொந்தமாக உள்ள, 2.10 ஏக்கர் நிலத்தில், அடிக்குமாடி குடியிருப்பு கட்ட, 'லோக்கா டெவலப்பர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 2019ல் ஒப்பந்தம் மேற்கொண்டது.
அந்த இடத்தில் கட்டப்பட்ட, 234 குடியிருப்புகளில், ஒரு குடியிருப்பை, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஓய்வுபெற்ற இயக்குநர் பத்மநாபன், அவரது மனைவி புஷ்பவதி ஆகியோர், 98.27 லட்சம் ரூபாய்க்கு வாங்கினர்.
வீட்டை, 18 மாதங்களில் ஒப்படைப்பதாக கூறிய நிலையில், கடந்த ஆண்டு வரை வீட்டை கட்டி முடித்து தரவில்லை. இது தொடர்பாக, பத்மநாபனின் மனைவி புஷ்பவதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, மாநில நுகர்வோர் நீதிமன்றம், 98.27 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்கும்படி, சுதீஷுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, எல்.கே.சுதீஷ், அவரது மனைவி பூர்ண ஜோதி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எல்.கே.சுதீஷ் தரப்பில், 'நிலம் தான் எங்களுக்கு சொந்தமானது. பணத்தை திருப்பி கொடுக்கும்படி, லோக்கா ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தான் உத்தரவிட்டிருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மாநில நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

