பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது எப்படி?
பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது எப்படி?
ADDED : ஜன 18, 2024 10:41 PM

சென்னை:''தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் 8.2 ஆக குறைந்துள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 2.97 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் ஒப்புயர்வு மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில், 4.76 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன உயிர் காக்கும் உயர்சிகிச்சை உபகரணம், 27 தாய்ப்பால் வங்கிகளுக்கு, 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
பச்சிளம் குழந்தைகள் இறப்பை குறைக்க, 2,650 கிராம சுகாதார தன்னார்வலர்கள், 54,439 அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில், எடை குறைவாக பிறக்கும் ஐந்து குழந்தைகளை கண்காணிப்பவர்களுக்கு, 250 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2020ல் குழந்தைகள் இறப்பு விகிதம், ஒவ்வொரு 1,000 குழந்தைக்கும், 13 பேர் என இருந்தது.
இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளால், 8.2 பேர் என, இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இங்கு துவக்கப்பட்ட திட்டங்கள், மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ., பரந்தாமன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

