புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கு விரிவாக்கம்
புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கு விரிவாக்கம்
ADDED : ஜூன் 24, 2025 11:11 PM
சென்னை:புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவியரின் உயர்கல்வியை ஊக்குவிக்க, 2022 செப்.,5ல் 'புதுமைப்பெண்' திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி கற்கும் அனைத்து மாணவியருக்கும், மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க, 2024 ஆக., 9ம் தேதி 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, உயர்கல்வியில் மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இத்திட்டங்கள், திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர், தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியத்தில் வழங்கப்பட்ட, அடையாள அட்டையை, சான்றாக சமர்ப்பித்து, பயன்பெறலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.