ஓராண்டாக சம்பளம் இல்லை இளநிலை உதவியாளர்கள் தவிப்பு
ஓராண்டாக சம்பளம் இல்லை இளநிலை உதவியாளர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 14, 2025 10:55 PM
சென்னை:'தாலுகா அலுவலகங்களில், தொகுப்பூதியத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிவோர், தங்களுக்கு ஓராண்டாக வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்குவதோடு, தொடர்ந்து பணி வழங்க வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுதும் தாலுகா அலுவலகங்களின் தேர்தல் பிரிவில் பணியாற்ற, 2005ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியே, இளநிலை உதவியாளர்கள், 81 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்; மாதம், 14,640 ரூபாய் சம்பளம்.
கடந்த ஆண்டு ஜூன் 30 வரை, சம்பளம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இப்பணியிடங்கள், 2027ம் ஆண்டு வரை அனுமதிக்கப்பட்ட இடங்கள். இதற்கு மனிதவள மேலாண்மை துறை மற்றும் நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனாலும், கடந்த ஆண்டு ஜூலை 1 முதல், அவர்கள் பணிபுரிய அரசாணை வெளியிடப்படவில்லை. எனவே, அவர்கள் சம்பளம் இல்லாமல், இதுநாள் வரை பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நீதிமன்றம் சென்றதால் அரசு, பணி ஆணை வழங்காமல் உள்ளது.
நீதிமன்றம் செல்லாதவர்கள், தங்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூலை முதல் பணிபுரிந்த காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.