ADDED : ஜன 23, 2024 10:27 PM
சென்னை:''கால்நடைகள் உற்பத்தி செய்யும் பசுமை வாயு வாயிலாக, புவி வெப்பமயமாதலை தடுக்கலாம்,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் பேசினார்.
சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவகல்லுாரியில், 'கால்நடைகளுக்கான நீடித்த நிலையான ஊட்டச்சத்து குறித்த கண்டுபிடிப்புகளும், வழிகாட்டுதலும்' என்ற தலைப்பில், மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் இந்திய கால்நடை ஊட்டச்சத்தியல் சங்கம் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் பேசியதாவது:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்ததை விட, நம் நாட்டில் கிடைக்கும் பாலின் உற்பத்தி அளவு அதிகமாக உள்ளது. நல்ல சத்தான உணவு மனிதர்களுக்கு கிடைக்க, கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழலை பேணிகாப்பது அவசியம். அதேபோல, உலக வெப்பமயமாதலை, கால்நடைகள் உற்பத்தி செய்யும் பசுமை வாயு தடுக்கும்.அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி கால்நடை துறை கமிஷனர் அபிஜித் மித்ரா பேசுகையில், ''கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படுவது அவசியம். அதுகுறித்து, பண்ணையாளர்களுக்கு, பல்கலைகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், கால்நடை வளர்ப்பில் நவீன யுக்திகளை பயன்படுத்துவது குறித்தும், வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்,'' என்றார்.

