மதுரை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சூறை கொலை குற்றவாளி வெறி; தப்பினார் ஏட்டு
மதுரை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சூறை கொலை குற்றவாளி வெறி; தப்பினார் ஏட்டு
ADDED : ஜூன் 15, 2025 01:59 AM

பேரையூர்,:மதுரை, வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் நேற்று அதிகாலை கொலை குற்றவாளி உட்பட இருவரால் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு பணியில் ஏட்டு பால்பாண்டி மட்டும் இருந்தார். நேற்று அதிகாலை 12:30 மணிக்கு, அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் மகன் பிரபாகரன், தன் நண்பருடன் ஸ்டேஷனுக்கு வந்தார்.
திடீரென, 'என் அப்பாவை எப்படி நீங்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம்?' எனக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென ஆவேசமடைந்தவர், கட்டையால் பால்பாண்டியை தாக்கி, ஒரு அறைக்குள் தள்ளி கதவை பூட்டினார். பின், ஸ்டேஷனில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை இருவரும் அடித்து நொறுக்கி, சூறையாடி தப்பிச் சென்றனர்.
ஸ்டேஷன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால், பால்பாண்டியால் யாரையும் உடனடியாக அழைக்க முடியவில்லை. அவரது மொபைல் போனும் நொறுக்கப்பட்டதால், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை.
அதிகாலை 5:30 மணியளவில் ஸ்டேஷன் வழியே 'வாக்கிங்' சென்ற ஒருவரை, ஜன்னல் வழியே பால்பாண்டி அழைத்து நடந்த விபரத்தை கூறினார். அவர் கதவை திறந்து பால்பாண்டியை மீட்டார். அதன் பின், பால்பாண்டி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.பி., அரவிந்த் நேரில் ஆய்வு செய்து, ஏட்டுவிடம் விசாரித்தார்.
போலீசார் கூறியதாவது:
இரு ஆண்டுகளுக்கு முன், வி.குச்சம்பட்டி அருகில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இவர் மீது, மூன்று கொலை வழக்குகள் உள்ளன; குண்டர் சட்டத்திலும் கைதானவர்; இரு மாதங்களுக்கு முன், ஜாமினில் வந்துள்ளார்.
இவரது தந்தையை வழக்கு ஒன்றில் விசாரிக்க, திண்டுக்கல் போலீசார் அழைத்து சென்றனர். இதையறிந்த பிரபாகரன், மதுரை மாவட்ட போலீசார் தான், தனக்கு பதில் தன் தந்தையை அழைத்து சென்றுள்ளனர் என தவறாக கருதி, ஸ்டேஷனுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள பிரபாகரனையும், அவரது நண்பரையும் கைது செய்ய, டி.எஸ்.பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், பீமா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினர்.
இதற்கிடையே, சூறையாடப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை பார்வையிடப் போவதாக கூறி புறப்பட்டு வந்த அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், தமிழரசன் உள்ளிட்டோரை போலீசார் வழியிலேயே மறித்து கைது செய்தனர்.
பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் இச்சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போலீசுக்கே பாதுகாப்பு இல்லை
வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகுந்த மர்ம நபர்கள், காவல் நிலையத்தை தாக்கி, சூறையாடிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என் அறிவுறுத்தலின்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, போலீசாரால் தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களை காக்க வேண்டிய காவல் துறைக்கும் பாதுகாப்பு இல்லை; தற்போது, உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. நான்காண்டு ஆட்சி சாதனை பட்டியலில், முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான். முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது, அவருக்கு வெட்கமாக இல்லையா? காவல் நிலையத்தையே காக்க முடியாத தி.மு.க., அரசு, மக்களை காக்க வாய்ப்பே இல்லை.
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
அரசின் அவல நிலை
மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இது, தி.மு.க., அரசின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதற்காக, காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும்.
- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்