திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா கைது
திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா கைது
UPDATED : டிச 05, 2025 08:05 AM
ADDED : டிச 04, 2025 08:08 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை இன்று மனுதாரர் ஏற்ற வேண்டும் இதற்கு மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டு இருந்தார்.
இதனையடுத்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் அங்கு கூடினர். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 144 தடை உத்தரவு நீக்கத்தை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
ஆனால், கலைந்து போக அவர்கள் மறுத்தனர். நயினார் நாகேந்திரனும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.அவரை தொடர்ந்து அங்கு வந்த பாஜ மூத்த தலைவர் எச்.ராஜாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

