நகர்ப்புற மனைப்பிரிவுகளுக்கு விரைவில் புதிய கட்டுப்பாடுகள்
நகர்ப்புற மனைப்பிரிவுகளுக்கு விரைவில் புதிய கட்டுப்பாடுகள்
ADDED : ஜன 13, 2024 11:13 PM
சென்னை:மழை வெள்ள பாதிப்பு களை கருத்தில் வைத்து, நகர்ப்புற பகுதிகளில் மனைப்பரிவுகளை உருவாக்கும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வாயிலாக, மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. பொது கட்டட விதிகள் அடிப்படையில், இதற்கான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
ஆய்வு
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், கடந்த சில ஆண்டுகளாக மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால், முறையாக அங்கீகாரம் பெற்ற மனை என்பதற்கான அடிப்படை பலன் என்ன என்பது போன்ற கேள்விகள், மக்களிடம் எழுந்தன.
இதன் அடிப்படையில், மனைப்பிரிவு அங்கீகார விதிகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. கிரெடாய், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களுடன், வீட்டுவசதி துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
தற்போது, 32,291 சதுர அடி முதல். 1.07 லட்சம் சதுர அடி வரையிலான மனைப்பிரிவுகளில், திறந்தவெளி ஒதுக்கீட்டுக்காக நிலத்தை வழங்காமல், அதற்கான தொகையை செலுத்தும் ஒரு நடைமுறை உள்ளது. இதனால், பல இடங்களில் மனைப்பிரிவுகளில் காலி இடங்களே இல்லாத நிலை ஏற்படுகிறது.
முடிவு
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள், இதனால் பாதிக்கப்படுகின்றன. எனவே, 32,291 சதுர அடிக்கு மேற்பட்ட மனைப்பிரிவுகளில், திறந்தவெளி ஒதுக்கீட்டுக்கான நிலம் ஒப்படைப்பதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மனைப்பிரிவுகளில் சாலைக்கான இடம் ஒதுக்கும் போது, அதில் மழை நீர் வடிகால், 'கேபிள்' பாதைக்கான இடத்தையும் ஒதுக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, வேறு பொது பயன்பாட்டு நிலங்களையும் மாற்று குறித்து யோசிக்காமல், அப்படியே பெற, பொது கட்டட விதிகளில், உரிய திருத்தங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

