ADDED : ஜன 23, 2024 10:20 PM
சென்னை:'தைப்பூச நாளான வரும் 25ம் தேதி, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 10 அலுவலகங்கள் மட்டுமே சனிக்கிழமையும் செயல்படுகின்றன. இந்நிலையில், சுப முகூர்த்த நாட்கள், தமிழ் புத்தாண்டு, ஆடிபெருக்கு, தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில், பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் விரும்புகின்றனர்.
மேலும், இந்நாட்களில் பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் கூடுதல் வருவாயும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் வைத்து தமிழ் புத்தாண்டு, ஆடி பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில், அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டாலும், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், தைப்பூச நாளான, வரும் 25ல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அன்றைய தினம் அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கூடுதல் டோக்கன் வழங்கலாமா என்பது குறித்த பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது.
மேலும், விடுமுறை நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான, 350 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தி, பொது மக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று,பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

