
ஜனவரி 10, 1940
-கேரள மாநிலம், போர்ட் கொச்சி அருகில் உள்ள கட்டசேரியில், அகஸ்டீன் ஜோசப் - அலைஸ்குட்டி தம்பதிக்கு மகனாக, 1940ல் இதே நாளில் பிறந்தவர் கே.ஜே.ஜேசுதாஸ்.
இவரது தந்தை மலையாள செவ்விசை கலைஞர் மற்றும் நடிகர். இவரிடம் முதலில் இசை கற்ற ஜேசுதாஸ், பின் திருப்பணித்துறை அகாடமி, வேச்சூர் ஹரிஹரசுப்பிரமணிய அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் உள்ளிட்டோரிடம் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கற்றார்.
மலையாளத்தில் பாடகராக அறிமுகமாகி, அனைத்து இந்திய மொழிகளிலும், 40,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மதபேதம் கடந்து, கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் பாடுவதை வழக்கமாக கொண்டவர். சபரிமலை கோவில் நடை அடைக்கும்போது இவரது, 'ஹரிவராசனம்...' பாடலே, அய்யப்பனுக்கு தாலாட்டாக அமைகிறது.
தமிழில், 'விழியே கதையெழுது, போய் வா நதியலையே, தென்பாண்டி தமிழே, ராஜராஜ சோழன் நான்...' உள்ளிட்ட பாடல்களால் நம் நெஞ்சில் நிறைந்தவர். எட்டு தேசிய விருதுகள், பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ள, 'கான கந்தர்வனின்' 84வது பிறந்த தினம் இன்று!

