
பிப்ரவரி 2, 1896
கோவை மாவட்டம், வெள்ளலுார் கிராமத்தில், அண்ணாசாமி அய்யரின் மகனாக, 1896ல் இதே நாளில் பிறந்தவர் வெ.அ.சுந்தரம்.
இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். சென்னையில், 1914ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் முதலாம் கூட்டத்தில் பங்கேற்றார். இவர் வங்கப்பிரிவினை எதிர்ப்பு போராட்டம், வைக்கம் சத்தியாகிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்டவற்றில் பங்கேற்றார்.
லண்டன் வட்ட மேஜை மாநாட்டில், காந்தியுடன் பங்கேற்கும் முன், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, சுவிட்சர்லாந்து, வாடிகன், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, செக்கோஸ்லோவாகியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்து, ஏழு மாதங்கள்காந்தியின் கருத்துகளை விளக்கினார்.
மதன்மோகன் மாளவியாவின் நேர்முக உதவியாளராக சேர்ந்து, வாரணாசியில், பனாரஸ் ஹிந்து பல்கலை உருவாக தேவையான பணிகளை செய்தார். பல்கலை உருவானபின், அதன் செயலராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். 1967, மார்ச் 11ல், தன், 71வது வயதில் மறைந்தார்.
'யங் இந்தியா, மாடர்ன் ரிவியூ, தி ஹிந்து' பத்திரிகைகளில் சுதந்திர கனலை மூட்டிய சுந்தரம் பிறந்த தினம் இன்று!

