' அண்ணாயிசத்தை ' அடிமையிசமாக மாற்றி விட்டார் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
' அண்ணாயிசத்தை ' அடிமையிசமாக மாற்றி விட்டார் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : செப் 18, 2025 10:18 AM
ADDED : செப் 18, 2025 02:34 AM

கரூர்: ''அ.தி.மு.க., துவங்கியபோது, அக்கட்சியின் கொள்கை அண்ணாயிசம் என கூறினர்; அதை இப்போது, பழனிசாமி அடிமையிசமாக மாற்றி, அமித் ஷாவே சரணம் என சரணடைந்துள்ளார்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கரூர் அருகே கோடங்கிபட்டி பிரிவு சாலை பகுதியில், தி.மு.க., முப்பெரும் விழா நேற்று நடந்தது. தி.மு.க., பொருளாளர் பாலு தலைமை வகித்தார். கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி வரவேற்றார்.
ஏராளமான திட்டங்கள்
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், கட்சி யினருக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதல், தி.மு.க., எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சாதாரண வெற்றியாக அல்லாமல், எதிரிகளை கலங்கடிக்கும் வெற்றியை பெற்றுள்ளோம். இந்த வெற்றிப்பயணம், 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் தொடரும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது, காவி கொள்கை. அதன் அரசியல் முகமாக பா.ஜ., உள்ளது. அவர்களுக்கு, எதிராக தொடர்ந்து போராடி கொண்டு இருக்கிறோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ., தான் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உண்மையை பேசி இருக்கிறார். அவர் நடத்திய கைப்பாவை அரசை, தமிழக மக்கள் துாக்கி எறிய, தி.மு.க., தான் காரணம் என்று, நம் மீது வன்மத்தைக் கொண்டுள்ளது பா.ஜ., எல்லா கட்சிகளும், தி.மு.க.,வை ஒழிப்போம் என சொல்லி வருகின்றன.
அதனாலேயே, ஒரு சில கட்சிகள் தி.மு.க.,வுக்கு நாங்கள் தான் மாற்று என பேசி வருகின்றன. ஆட்சிக்கு வந்தபோது எவ்வளவோ நெருக்கடியில் பொறுப்பேற்றோம். ஒரு பக்கம் நிதி பற்றாக்குறை, இன்னொரு பக்கம் கொரோனா தொற்றையும் தாண்டி, ஏராளமான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. நம்மை நோக்கி முதலீடுகளை ஈர்த்து, 'டபுள் டிஜிட்' பொருளாதார வளர்ச்சி உள்ள ஒரே மாநிலம் தமிழகம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யவில்லை. தமிழக உரிமைக்கு குரல் கொடுக்காமல், அடிமை சாசனம் எழுதி கொடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல், என்னை ஒருமையில் பேசி வருகிறார். தொடை நடுங்கும் பழனிசாமியை மக்கள் தெளிவாக எடை போட்டு பார்ப்பர் என்று நானும் விட்டுட்டேன். தன்னை காப்பாற்றி கொள்ள, அ.தி.மு.க.,வை அவர் அடகு வைத்து விட்டார்.
உரிமை போராட்டம்
அ.தி.மு.க., துவங்கியபோது கொள்கை அண்ணாயிசம் என கூறினர்; அதை இப்போது, பழனிசாமி அடிமையிசமாக மாற்றி, அமித் ஷாவே சரணம் என சரணடைந்துவிட்டார். திராவிடம் என்றால் என்ன என்று தெரியாதவர், அ.தி.மு.க., தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
டில்லியில் மாறி மாறி காரில் பயணித்த பழனிசாமியை பார்த்து, 'காலில் விழுந்த பின், முகத்தை மூட கர்சிப் எதுக்கு' என்று கேட்கின்றனர். மத்திய, பா.ஜ.,வின் மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து கொண்டு இருக்கிறோம்.
இங்கு எப்போதும், பா.ஜ.,விற்கு 'நோ என்ட்ரி' தான். பா.ஜ.,வை தடுத்து நிறுத்திவில்லை என்றால், மாநிலங்கள் இல்லாத நிலையை பா.ஜ., உருவாக்கும். எனவே, உரிமை போராட்டம் நடத்தி, நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி, துணை பொதுச்செயலர் கனிமொழி, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

