வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் கட்டணம் பன்னீர்செல்வம், தினகரன் கண்டனம்
வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் கட்டணம் பன்னீர்செல்வம், தினகரன் கண்டனம்
ADDED : செப் 26, 2025 01:20 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பை நியாயமாக நிர்ணயிப்போம் எனக் கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஏழை மக்களின் சொந்த வீடு கனவை குழிதோண்டி புதைத்துள்ளது.
வழிகாட்டி மதிப்பு உயர்வு உட்பட பல காரணங்களால், 1,000 சதுர அடிக்கு 5 லட்சம் ரூபாய் என்றிருந்த பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம், தற்போது இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்து விட்டது.
இந்நிலையில், நிலங்களின் சந்தை மதிப்பு உயர்வு, வங்கி வழியே சிலர் கடன் பெற, கூடுதல் மதிப்பில் பத்திரங்கள் பதிவு செய்வது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக 30 சதவீதம் உயர்த்தி, அதற்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பதிவுத்துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் மதிப்பை சார் - பதிவாளர்கள் தெரிவிப்பது, வீடு மற்றும் நிலம் வாங்குவோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அ.ம. மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கையில் , 'வழிகாட்டி மதிப்பு உயர்வை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பதிவுத்துறை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்புக்கு ஏற்ப, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.