ADDED : ஜன 23, 2024 11:20 PM

சென்னை:''தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம்,'' என, அக்கட்சியின் துணை பொதுச்செயலரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமானகனிமொழி கூறினார்.
தி.மு.க.வில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, ஒருங்கிணைப்பு குழு, கூட்டணி கட்சிகளிடம் பேச்சு நடத்தும் குழு அமைக்கப்பட்டு உள்ளன.
அதில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று கனிமொழி தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் கோவி.செழியன், எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், எழிலன், மேயர் பிரியா பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொது மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வாக்குறுதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கை கேட்பு
பெண்கள், விவசாயிகள்,மாணவ - மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின், கனிமொழி அளித்த பேட்டி:
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பொது மக்கள், தொழிலாளர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்பர்.
விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மறுபடியும் சென்னையில் கூடி பேசி, தேர்தல் அறிக்கையில் அவற்றை இடம் பெற செய்வோம்.
முதல் கட்டமாக, எந்தெந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற பட்டியல் தயார் செய்யப்பட்டு முதல்வர் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குழுவினர் பயணம் செய்வர்.
மின்னஞ்சல்
எந்த விஷயத்தை அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது, முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பின் தெரிவிக்கப்படும்.
பல்வேறு அமைப்புகளின், பொது மக்களின் கருத்துக்களை பெற, மின் அஞ்சல், தொலைபேசி எண்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்றில்லை, கதாநாயகியாகவும் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

