50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'டயாலிசிஸ்' சிகிச்சை மையங்கள்; தனியார் ஏன்... ரூ.100 கோடியை தமிழக அரசு செலவிடாதா?
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'டயாலிசிஸ்' சிகிச்சை மையங்கள்; தனியார் ஏன்... ரூ.100 கோடியை தமிழக அரசு செலவிடாதா?
UPDATED : ஜூன் 25, 2025 06:25 AM
ADDED : ஜூன் 24, 2025 11:04 PM

சென்னை:சிறுநீரக செயலிழப்புக்குள்ளான நோயாளிகளின் உயிரை காக்க, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை, 'ஹீமோ டயாலிசிஸ்' என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த சிகிச்சை மேற்கொள்ள, சிறுநீரக மருத்துவ டாக்டர்கள், ரத்தநாள மருத்துவ நிபுணர்கள், இதய மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களின் ஆலோசனையும் கண்காணிப்பும் அவசியம். ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை டெக்னீசியன்களும் அவசியம்.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஓரிரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம், கிராமப்புற மக்கள் எளிதில் அணுக முடியாத சூழலில் இருப்பதால், அருகாமை தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
எனவே, கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில், மேம்படுத்தப்பட்ட 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் பங்களிப்புடன், டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தனியார் பங்களிப்புடன் 50 டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைப்பதற்கு அனுமதி அளித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.