கற்கால கருவிகளை தீட்டிய குழிகள் திருப்பூர் தத்தனுாரில் கண்டுபிடிப்பு
கற்கால கருவிகளை தீட்டிய குழிகள் திருப்பூர் தத்தனுாரில் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 18, 2025 12:00 AM

சென்னை:திருப்பூர் மாவட்டம், தத்தனுாரில் புதிய கற்கால மனிதர்கள், தங்களின் கற்கருவிகளை தீட்ட பயன்படுத்திய குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், தத்தனுார் அடிபெருமாள் கோவில் வளாகம், ராயர்பாளையம் வண்ணாம்பாறை சிறிய மலைக்குன்று ஆகிய இடங்களில், 3,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள், தங்களின் கற்கருவிகளை பளபளப்பாக்குவதற்காக, பாறைகளில் தேய்த்த பள்ளங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.
யாக்கை மரபு அறக்கட்டளை குழுவைச் சேர்ந்த குமரவேல் ராமசாமி, சுதாகர் நல்லியப்பன், வெங்கடேஷ் தனபால் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவினர், கொங்கு பகுதி பாறை, மலைகளில் கள ஆய்வு செய்தனர்.
அப்போது, அடிபெருமாள் கோவில் வளாகத்தில், 104 குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குழிகள், அந்த கால மனிதர்கள், விவசாயம் மற்றும் வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய கைக்கோடரி உள்ளிட்ட கற்கருவிகளை கையில் பிடிக்க வசதியாக தேய்த்து பளபளப்பாக்கியதால் ஏற்பட்டவை.
இதுகுறித்து, குமரவேல் ராமசாமி கூறியதாவது:
தத்தனுார் அடிபெருமாள் கோவில் வளாகத்தில், 104 குழிகளும், வண்ணாம்பாறையில், ஏழு குழிகளும் உள்ளன.அடிபெருமாள் கோவிலில் இந்த குழிகளை பெருமாள் பாதமாக பக்தர்கள் வணங்குகின்றனர்.
இவற்றில் ஒரு பெரிய குழி உள்ளது. அது, 54 செ.மீ., நீளமும் 16.5 செ.மீ., அகலமும் உள்ளது. மற்றொரு குழியின் ஆழம், 4.2 செ.மீ., ஆக உள்ளது.
இதன் சுற்றுவட்டார பகுதிகளில், பரவலாக 'குவார்ட்ஸ்' வகை பாறைகளைச் சேர்ந்த கற்கால கருவிகளும், அவை உருவாக்கும்போது கழிக்கப்பட்ட செதில்களும் கிடைக்கின்றன. மேலும், இந்த பாறைக்கு அருகில், இரும்புக் கசடுகளும் கிடைக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

