உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாதீர் பா.ம.க., பொருளாளர் வேண்டுகோள்
உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாதீர் பா.ம.க., பொருளாளர் வேண்டுகோள்
ADDED : ஜூன் 15, 2025 07:09 AM

மதுரை : ''உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாமல், பா.ம.க., நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்'' என மாநிலப் பொருளாளர் சையத் மன்சூர் உசேன் வேண்டுகோள் விடுத்தார்.
மதுரையில் பா.ம.க., சார்பில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், சிறப்பு செயற்குழுக் கூட்டம் செயலாளர் கிட்டு தலைமையில் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். மத்திய மாவட்டச் செயலாளர் பாரதி பாண்டியன் முன்னிலை வகித்தார்.
சையத் மன்சூர் உசேன் பேசியதாவது:
ராமதாஸ், மற்ற ஜாதியினர், இஸ்லாமியர், அருந்ததியர் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடி வருகிறார். ஆனால் பா.ம.க., 'வன்னியர்களுக்கான கட்சி' என பேசுகின்றனர்.
ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கினார். ஒவ்வொரு திட்டங்களையும் ராமதாஸ் சொல்ல, அன்புமணி செயல்படுத்தினார்.
கட்சிக்குள் நடப்பதை ராமதாஸ் கூறுகிறார். அதை திரித்து, அவர் மீது பழி போடும் வகையில், பா.ம.க.,வில் உட்கட்சி பிரச்னை உள்ளதாக ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. அதில் கவனம் செலுத்தாமல் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

