விமான எரிபொருள் நுாதன திருட்டு 6 பேர் கும்பல் போலீசில் சிக்கியது
விமான எரிபொருள் நுாதன திருட்டு 6 பேர் கும்பல் போலீசில் சிக்கியது
ADDED : ஜூன் 24, 2025 07:43 PM
புதுடில்லி:விமானங்களில் நிரப்ப டில்லி விமான நிலையத்திற்கு எடுத்து சென்ற எரிபொருளை, வழியிலேயே சுருட்டிய கும்பலில், ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனால், மாதம் 1.62 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த நுாதன திருட்டை டில்லி போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு நிரப்ப, பகதுார்கார் என்ற இடத்தில் உள்ள அசோதா எச்.பி.சி.எல்., எரிபொருள் கிடங்கிலிருந்து, லாரிகளில் ஏ.டி.எப்., என்ற விமான எரிபொருள் அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த எரிபொருளை வழியிலேயே ஒரு கும்பல், மூன்றாண்டுகளாக திருடி வந்தது. தினமும், 5,000 லிட்டர் விமான எரிபொருள் திருடப்பட்டு, மாதம் தோறும், 1.62 கோடி ரூபாய் அளவுக்கு நுாதனமாக திருட்டு நடந்து வந்தது.
இதற்காக, எரிபொருள் எடுத்துச் செல்லும் லாரிகளில் பொருத்தப்படும், ஜி.பி.எஸ்., கருவியை மாற்றி, போலி அளவீட்டு கருவிகளை பயன்படுத்தி, தினமும், 5,000 லிட்டர் எரிபொருள், பல லாரிகளில் திருடப்பட்டு வந்தது.
முண்ட்கா என்ற இடத்தில் திருடப்பட்ட விமான எரிபொருளை, மினரல் டர்பன்டைன் எண்ணெய் தயாரிக்கும் சில நிறுவனங்களுக்கு, குறைந்த விலைக்கு விற்று, ஒரு கும்பல் லாபம் சம்பாதித்து வந்தது.
அதையடுத்து, டில்லி போலீசார் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில், அந்த நுாதன திருட்டை செய்து வந்த ஆறு பேர் கும்பல் நேற்று கைது செய்யப்பட்டனர்; மேலும், இருவரை தேடுகின்றனர்.
இதனால், மாதம்தோறும் அரசுக்கு ஏற்பட்டு வந்த, 1.62 கோடி ரூபாய் திருட்டு, தடுக்கப்பட்டுள்ளது. நுாதனமாக திருடி வந்த நான்கு பிக் - அப் வேன்கள், 1.05 லட்ச ரூபாய், போலி அளவீட்டு கருவிகள் மற்றும் மாஸ்டர் கீ போன்ற சில உபகரணங்களை இந்த கும்பலிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், விசாரணைக்காக அந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.