திருட்டு வழக்கில் போலீசாரின் செயல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருட்டு வழக்கில் போலீசாரின் செயல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : ஜன 23, 2024 05:29 AM
சென்னை : திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தாயிடம் இருந்து, நகைகளை பறித்த இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆலந்துார்பாக்கத்தைச் சேர்ந்த, முகமது ரபிக் என்பவர் தாக்கல் செய்த மனு: என் மனைவியின் சகோதரி ரோஸ் பானுவின் வீடு, ஆதம்பாக்கத்தில் உள்ளது. அங்கு, என் மகன் சென்று தங்கினான். சில நாட்களில் வீடு திரும்பினான்.
இதையடுத்து, தன் வீட்டில் இருந்து நகைகள் திருடு போனதாக, ஆதம்பாக்கம் போலீசில், ரோஸ் பானுவின் கணவர் புகார் அளித்தார். 2016 பிப்ரவரியில் சம்பவம் நடந்தது. விசாரணைக்காக போலீசார் அழைத்தனர். நானும், மனைவியும் சென்றோம். எங்களை போலீசார் துன்புறுத்தினர்.
கடைசியில், என் மனைவியின் நகைகளை போலீசார் வலுக்கட்டாயமாக பறித்து, புகார் அளித்தவரிடம் கொடுத்து விட்டனர். யூகத்தின் அடிப்படையில் போலீசார் செயல்பட்டனர்.
எனவே, இன்ஸ்பெக்டர் பிரபு, சப் -இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் ஆகியோருக்கு எதிராக நான் அளித்த புகாரின் மீது, குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
பறிமுதல் செய்த பத்தரை சவரன் நகைகளை, திருப்பி அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையில், சமாதான போக்கை மேற்கொள்ள, போலீஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. இதை அனுமதித்தால், போலீஸ் நிலையங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டு விடும்.
நீதிமன்றத்தின் அதிகாரங்களை, போலீஸ் அதிகாரிகள் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. திருடு போன நகைகள் இதுவரை மீட்கப்படவும் இல்லை.
திருடு போன நகைகளுக்குப் பதிலாக, மனுதாரரையும், அவரது மனைவியையும் நிர்ப்பந்தம் செய்து, அவர்களின் நகைகளை வாங்கி புகார் கொடுத்தவரிடம் ஒப்படைத்தது முறையற்றது. இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டரும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர்.
மனுதாரரையும், அவரது மனைவியையும் கைவிலங்கிட்டு, மோசமாக நடத்தியதாக, போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.
எனவே, இன்ஸ்பெக்டர், சப் -இன்ஸ்பெக்டருக்கு எதிராக, நான்கு வாரங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், குற்ற நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

