அரசை கண்டித்து நோயாளிகளிடம் முறையீடு நர்ஸ்களை தடுத்து நிறுத்திய போலீசார்
அரசை கண்டித்து நோயாளிகளிடம் முறையீடு நர்ஸ்களை தடுத்து நிறுத்திய போலீசார்
ADDED : செப் 26, 2025 01:26 AM
சென்னை:அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நர்ஸ்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் நர்ஸ்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நர்ஸ்களை நியமிக்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்ப்பு அந்த வகையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம், தங்கள் கோரிக்கையை முறையிடும் போராட்டத்தை, நேற்று முன்தினம் துவக்கினர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், இரண்டாம் நாளாக நேற்று, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, உள்நோயாளிகள் பிரிவில் நடத்தினர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் உறவினர்களுடன், தங்கள் பிரச்னைகள் குறித்து நர்ஸ்கள் பேசிக் கொண்டிருந்தபோது, போலீசார் அங்கு வந்து, நர்ஸ்களை தடுத்து நிறுத்தினர். அதேபோல், மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், நர்ஸ்கள் நடத்திய மக்கள் சந்திப்பு போராட்டத்தை போலீசார் தடுத்தனர்.
இதற்கு, செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
மிரட்டல் இது குறித்து, சங்க செய லர் நே.சுபின் கூறியதாவது:
அமைதியான முறையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. போலீசார் அத்துமீறி, கையில் இருந்த பிரசார நோட்டீஸ் மற்றும் அடையாள அட்டையை பறித்து, 'இனி இதுபோன்று நடக்க கூடாது' என, எழுதி தந்துவிட்டு செல்லும்படி மிரட்டுகின்றனர்.
அத்துடன், நர்ஸ்களை மன ரீதியாக துன்புறுத்துகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தனி மனிதரின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.