'பாரத் ஆட்டா' கோதுமை மாவு கூட்டுறவு அங்காடியில் விற்பனை
'பாரத் ஆட்டா' கோதுமை மாவு கூட்டுறவு அங்காடியில் விற்பனை
ADDED : ஜன 18, 2024 10:43 PM

சென்னை:வட மாநிலங்களில் வசிக்கும் மக்களின் உணவில் கோதுமை, தென் மாநிலங்களில் அரிசி பயன்பாடு அதிகம் உள்ளன. சமீபகாலமாக, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், தமிழகத்திலும் கோதுமை பயன்பாடு அதிகரித்துள்ளது.
வெளிச்சந்தையில் 1 கிலோ கோதுமை மாவு விலை, 50 - 60 ரூபாய் உள்ளது. அதன் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் குறைந்த விலைக்கு கோதுமை மாவு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ பாரத் ஆட்டா கோதுமை மாவு விலை, 27.50 ரூபாய். இதற்காக, மத்திய அரசு அனுமதி அளித்துள்ள அரவை ஆலைகளுக்கு, இந்திய உணவு கழகம் குறைந்த விலைக்கு கோதுமை வழங்குகிறது.
தமிழகத்தில், 1,000 டன் பாரத் ஆட்டா கோதுமை மாவு விற்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதன் விற்பனையை மேற்கொள்ள, 'நாபெட்' எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம், பாரத் கோதுமை மாவு தயாரிக்கிறது. தற்போது, கோவையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, திருப்பூரில் சில கூட்டுறவு அங்காடிகளில், பாரத் ஆட்டா கோதுமை மாவு விற்கப்படுகிறது.
சென்னையில், டி.யு.சி.எஸ்., காஞ்சி கூட்டுறவு, பூங்கா நகர் கூட்டுறவு பண்டக சாலை, வட சென்னை கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் கூட்டுறவு அங்காடிகளில் பாரத் ஆட்டா விற்கப்பட உள்ளது.

