ADDED : ஜன 21, 2024 02:13 AM
சென்னை : 'கிடப்பில் உள்ள ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்' என, ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், பிப்., 1ல் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்த பட்டியலை, மாநில அரசுகள் தயார் செய்து அனுப்பி வருகின்றன. அதேபோல், ரயில்வே மண்டலங்களும் அறிக்கை தயாரித்து, அளித்து வருகின்றன.
தமிழகம் மற்றும் கேரள மாநில ரயில் திட்டங்களின் நிலவரம் குறித்து, தெற்கு ரயில்வே தரப்பில், ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பிரதானமான ரயில்வே கனவு திட்டமான, சென்னை - எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் 1998ல் துவங்கி, தற்போது திருநெல்வேலி வரை முடிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
சென்னை - மகாபலிபுரம் - கடலுார் வரை 179 கி.மீ., திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை 70 கி.மீ., திண்டிவனம் - நகரி 179 கி.மீ., ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி 60 கி.மீ., உட்பட புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.
இந்த திட்டங்களுக்கு 4,445 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், இந்தப் பணிகள் கிடப்பில் கிடக்கின்றன.
தமிழக ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என, அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

