பேச்சு, பேட்டி அறிக்கை: தி.மு.க., அரசு மீது மக்கள் கடும் ஆத்திரம்
பேச்சு, பேட்டி அறிக்கை: தி.மு.க., அரசு மீது மக்கள் கடும் ஆத்திரம்
ADDED : ஜன 19, 2024 12:57 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
தி.மு.க., அரசு மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். 'ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் ரேஷன் கடையில், ௧ கிலோ உளுந்தம் பருப்பு வழங்குவோம்' என்றனர். இன்றைக்கு ரேஷன் கடைகளில், மாதந்தோறும் வழங்கப்பட்ட துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை, படிப்படியாக நிறுத்தி விட்டனர். இது தொடர்ந்து கிடைக்குமா என, மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலில் கமிஷன் பேரம் படியாத காரணத்தால், நிறுத்தியிருப்பாங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
வள்ளுவருக்கு காவி உடுத்திய கவர்னர் மீது ஏன் கோபப்பட வேண்டும். விருப்பப்பட்டவர்கள் தொப்பி போட்டு பார்க்கட்டும். சிலுவை டாலர் போட்டும் வணங்கட்டும். அதன் வழியே பொதுமறை புலவன் என்பது ஊர்ஜிதமாகட்டும். 'இறைவனிடம் கையேந்துங்கள்' எனும் நாகூர் ஹனிபா பாடலை, அவரவர் இறைவனை நினைத்து பாடுவதில்லையா?
இவர் சொல்வது நுாற்றுக்கு நுாறு சரி... ஆனாலும், கவர்னர் மீது குறை சொல்ல வேண்டும் என்றே துடிக்கும் கட்சிகள் இதை ஏத்துக்கவே ஏத்துக்காது!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'தமிழகத்தில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 'திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' என, நீங்கள் போற்றிப் புகழும், ஈ.வெ.ராமசாமி, திருக்குறளை, திருவள்ளுவரை கேவலப்படுத்தி கறைப்படுத்தியதைப் போல், யாரும் கறைப்படுத்த முடியாது என்பது உண்மைதான்.
அவங்க விரலை வச்சே, அவங்க கண்ணை குத்துற வித்தையே, இவர்கிட்டதான் கத்துக்கணும்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும், கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுக்கு பதிலாக, தங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், அரசுப் பணி வழங்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். அதை இந்த ஆண்டிலாவது அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

