'யார் எங்கு உள்ளனர் என்பது ஓட்டு எண்ணும் போது தெரியும்' அண்ணாமலைக்கு சீனிவாசன் பதில்
'யார் எங்கு உள்ளனர் என்பது ஓட்டு எண்ணும் போது தெரியும்' அண்ணாமலைக்கு சீனிவாசன் பதில்
ADDED : ஜன 13, 2024 11:42 PM
திண்டுக்கல்:''ஓட்டு எண்ணும் போது தான், எந்த கட்சி எங்கு உள்ளது என்பது தெரியும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
கிரஹப்பிரவேச வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, சாப்பாடு சரியில்லை என அ.தி.மு.க., குறித்து கூறியதோடு, என்.டி.ஏ., கூட்டணியில் ஒன்பது ஆண்டுகள் இருந்து விட்டு, அ.தி.மு.க., வெளியே வந்த பின் 'கூட்டணி கதவுகள் திறந்திருக்கின்றன' என்று பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியது, அவருடைய கருத்தாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு அ.தி.மு.க., ஏன் வெளியே வந்தது என்பது குறித்து பொதுச்செயலர் பழனிசாமி தெள்ளத் தெளிவாக பலமுறை தெரிவித்து விட்டார். காரணம் என்ன என்பது அ.தி.மு.க.,வினருக்கு தெரியும். தமிழக மக்களும் புரிந்து கொண்டு விட்டனர்.
தமிழகத்தின், 234 தொகுதிகளிலும், எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் இதைச் சொல்லி விட்டோம். அதன்பின்னும் யாருக்கும் சந்தேகம் இருக்குமானால், ஓட்டு எண்ணும் போது தான், எந்த கட்சி, எங்கு உள்ளன என்பது குறித்து தெரிய வரும். யாருடைய நிலை என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
கூட்டணிக்கு வருமாறு அண்ணாமலை யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது.
காமராஜர் குறித்தெல்லாம் விமர்சிக்கின்றனர். ஆனால், காமராஜர் யார் என்பதும், மற்றவர்கள் யார் என்பதும் பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதெல்லாம் தி.மு.க., தலைவர்களுக்கான கவலை.
பொதுமக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வரும் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் நல்ல தீர்ப்பை அளிப்பர். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அ.தி.மு.க.,வுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது உண்மைதான். விழாவிற்கு செல்வது குறித்து முடிவெடுக்கவில்லை. ஆனால், சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

