ADDED : ஜன 23, 2024 10:26 PM
சென்னை:தமிழக அரசு உருவாக்கி உள்ள, மாநில மகளிர் கொள்கைக்கு, நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தமிழக அமைச்சரவை கூட்டம், தலைமைச் செயலகத்தில், காலை 11:00 மணிக்கு துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
ஒரு மணி நேரம் நடந்தது. கூட்டத்தில், சமூக நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டி:
மகளிர் கொள்கையை விரைவில் முதல்வர் வெளியிடுவார். தேசிய மகளிர் கொள்கை, 2001ல் வெளியிடப்பட்டது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், பெண்களுக்கு தனியாக கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது, தற்போது நடைமுறைக்கு வர உள்ளது.
ஒட்டுமொத்த பெண்களுக்கான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆட்சி அதிகாரம், தொழில் பயிற்சி அளித்தல் போன்ற அம்சங்கள், அதில் இடம் பெற்றுள்ளன.
இவற்றை கண்காணிக்க, தலைமை செயலர் தலைமையில் மாநில அளவிலும், கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். ஏற்கனவே வரைவு கொள்கை வெளியிடப்பட்டது.
அதன்பின், பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திட்டத்திலும், பெண்கள் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர் என்ற விபரத்தை தெரிவிக்கும்படி, சமூக நலத்துறை சார்பில், அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

