மானிய விலை சிமென்ட் வினியோகம் பாதிப்பு கட்டுமான பணிகள் சுணக்கம்
மானிய விலை சிமென்ட் வினியோகம் பாதிப்பு கட்டுமான பணிகள் சுணக்கம்
ADDED : செப் 18, 2025 02:45 AM

மதுரை:தமிழக அரசு மானிய விலையில் வழங்கும் சிமென்ட், மூன்று மாதங்களாக வினியோகிக்கப்படாததால், கட்டுமானப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு 2014ல் சிமென்ட் விலையை கட் டுக்குள் வைக்கும் நோக்கில், கட்டுமானங்களுக்கு மானிய விலையில் சிமென்ட் வினியோகம் செய்தது.
வெளிமார்க்கெட்டில் மூடை ஒன்றுக்கு, 390 ரூபாய் முதல், 420 ரூபாய் வரை விற்கும் நிலையில், சாதாரண மக்களுக்கு இதில் பாதி விலையாக 216 ரூபாய்க்கு கிடைத்தது.
அந்தந்த ஒன்றியத்தில் விண்ணப்பித்து மானிய விலையில் சிமென்ட் மூடைகளை பெறலாம். மூன்று மாதங்களாக இந்த திட்டத்தில் மூடைகள் வராததால் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால், கட்டுமானதாரர்கள் பாதித்துள்ளனர்.
இந்த மூடைகளுக்காக பலர் ஒன்றியங்களில் விண்ணப்பித்து பணமும் செலுத்தியுள்ளனர். எப்போது வரும் என அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் கேட்ட வண்ணம் உள்ளனர். அதிகாரிகளோ அரசு ஒதுக் கீடு வரும்போது கிடைக்கும் என்று சமாளிக்கின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நிறுவனங்கள் மானிய விலைக்கு ஒதுக்கும் மூடைகளுக்கான விலை கட்டுப்படியாகவில்லை. இதனால், கூடுதல் தொகை எதிர்பார்த்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முடிவு எட்டப்படாத நிலையில், சிமென்ட் மூடைகள் வருவது தாமதமாகும்' என்கின்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் கூறுகையில், ''ஏழை மக்களுக்கு பேருதவியாக உள்ள மானியவிலை சிமென்ட் மூடைகளை, வினியோகிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் .
''இதனால், அதிக வேலைவாய்ப்பு தரும் கட்டுமான பணிகளில் சுணக்கமும், பாதிப்பும் ஏற்படுகிறது,'' என்றார்.

