தமிழில் தொழில்நுட்ப சேவைகள் முதல்வர் ஸ்டாலின் உறுதி
தமிழில் தொழில்நுட்ப சேவைகள் முதல்வர் ஸ்டாலின் உறுதி
ADDED : பிப் 11, 2024 12:02 AM
சென்னை:'செயற்கை நுண்ணறிவு பாதையில், தமிழ் மொழியை வெற்றிகரமாக பயணிக்க வைக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு நிறைவு விழா, நேற்று சென்னையில் நடந்தது. விழாவில், முதல்வரின் ஸ்டாலின் வாழ்த்து செய்தியை, அமைச்சர் தியாகராஜன் வாசித்தார்.
முதல்வர் கூறியிருப்பதாவது:
இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது, மாநில வாரியாக பார்த்தால், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, தொலை தொடர்பு ஆய்வக அறிக்கை கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எந்தவிதமான தொழில்நுட்பம் வந்தாலும், அவை அனைத்திலும் தமிழ் வாழ வேண்டும்; ஆள வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
செயற்கை நுண்ணறிவு யுகத்தில், மொழி தொழில்நுட்பத்துக்காக, இந்தியாவிலேயே முதன் முதலாக மாநாடு நடத்துவது, தமிழக அரசு தான்.
செயற்கை நுண்ணறிவு, அதிக அளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை ஆகிய தளங்களில் மாநாடு நடந்து உள்ளது.
செயற்கை நுண்ணறிவு பாதையில், தமிழ் மொழியை வெற்றிகரமாக பயணிக்க வைக்க வேண்டும். தொழில் நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி தகவமைக்கப்பட வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல, தமிழில் தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் கிடைக்க தமிழக அரசும் ஆவன செய்யும்.
இவ்வாறு, முதல்வர் கூறியிருந்தார்.

