செப். 27 முதல் சென்னையில் வேளாண் வணிக திருவிழா விருதுநகரை கைவிட்டதன் பின்னணி
செப். 27 முதல் சென்னையில் வேளாண் வணிக திருவிழா விருதுநகரை கைவிட்டதன் பின்னணி
ADDED : செப் 19, 2025 03:30 AM
சென்னை:விருதுநகர் மாவட்டத்தில் நடக்கவிருந்த, வேளாண் வணிக திருவிழாவை, சென்னையில் நடத்துவதற்கான காரணத்தை, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாய விளை பொருட்கள் விற்பனை ஊக்குவிப்பு, புதிய வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பயன்பாடு, புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ள, வேளாண்துறை வாயிலாக, கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு, ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டத்தில், வேளாண் திருவிழா நடத்தப்படும் என்று, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தில், ஜூன் மாதம் மூன்று நாட்கள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதைத் தொடர்ந்து விருதுநகரில், கண்காட்சி நடத்தப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், விருதுநகருக்கு பதிலாக, செப். 27 ம் தேதி முதல் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வேளாண் வணிக திருவிழா நடக்கும் என, வேளாண் துறை அறிவித்துள்ளது. விருதுநகருக்கு பதிலாக, சென்னையில் கண்காட்சி நடத்துவதற்கான காரணத்தை, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விருதுநகரை விட சென்னையில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் சத்தான உணவுகளை சுவைக்க விரும்புகின்றனர். ஆனால், யாரிடம் இருந்து தரமான உணவுகளை வாங்குவது என்ற குழப்பம் உள்ளது. இதற்கு தெளிவான விளக்கம் அளிப்பதற்காக, வேளாண் வணிக திருவிழாவை, சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்விழாவில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தயாரித்த, 300 வகையான மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் உணவு பொருட்கள், விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் வாயிலாக, உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கும். வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி நிரந்தர வருமானத்தையும் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

