பூண்டு விலை தொடர்ந்து அதிகரிப்பு கிலோ ரூ.350க்கு விற்பனை
பூண்டு விலை தொடர்ந்து அதிகரிப்பு கிலோ ரூ.350க்கு விற்பனை
ADDED : ஜன 18, 2024 10:45 PM
சென்னை:பூண்டு விலை வேகமாக அதிகரித்து வருவது, நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு சாகுபடி நடந்து வருகிறது. தமிழகத்தில், திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பூண்டு சாகுபடி நடக்கிறது.
கடந்தாண்டு, பூண்டு விளைச்சல் மழையால் பாதிக்கப்பட்டது. புதிதாக சாகுபடி செய்யப்பட்ட பூண்டு அறுவடை தாமதம் ஆகி வருகிறது. விளைச்சல் குறைவு மட்டுமின்றி ஏற்றுமதி, பதுக்கலும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பூண்டு விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மளிகை சந்தையில், 1 கிலோ முதல் தர பூண்டு, 350 ரூபாய், இரண்டாம் தரம் 300, மூன்றாம் தரம் 250 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்தாண்டு அக்டோபரில், 1 கிலோ முதல் தர பூண்டு, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நவம்பர் மாதம் 250 ரூபாய்க்கும், டிசம்பரில் 300 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. டிசம்பர் மாதத்தை விட தற்போது, 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் தான்விலை குறையும்
வடமாநிலங்களில் இருந்து உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பூண்டு ஏற்றுமதி நடக்கிறது. உற்பத்தி குறைந்துள்ளதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், பூண்டு விலை ஏற்றத்துக்கு காரணம். இம்மாத இறுதிக்குள், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிப்., மாதம் புதிய அறுவடை துவங்கும் என்பதால், பூண்டு விலை குறையும். இருப்பு வைக்கப்பட்ட பூண்டு தற்போது சந்தைக்கு வருகிறது. அதில் கழிவுகள் அதிகம் இருக்கும் என்பதால், தரமான பூண்டு வாங்குவதற்கு இது உகந்த நேரம் இல்லை.
- அசோக், மளிகை வியாபாரி, கோயம்பேடு சந்தை, சென்னை

