திருப்பரங்குன்றம் மலை வழக்கு; நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை வழக்கு; நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ADDED : ஜூன் 25, 2025 03:41 AM

மதுரை :மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால்தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வுஉத்தரவிட்டது.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போதுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், 'தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
திருப்பரங்குன்றம் ஒசீர்கான், 'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிடக்கூடாது. அப்பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,' என்று மனு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள்,'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்று என அறிவிக்க உத்தரவிட வேண்டும்,'என்று மனு செய்தார்.
இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
கலெக்டர் தரப்பு கூறுவது என்ன
அப்போது கலெக்டர் தரப்பு தாக்கல் செய்த பதில் மனு:ஹிந்து அமைப்பு 'ஸ்கந்த மலை', முஸ்லிம் அமைப்பு 'சிக்கந்தர் மலை', சமண சமூகம் 'சமணர் குன்று' எனவும், உள்ளூர் மக்கள் இதை 'திருப்பரங்குன்றம் மலை' எனவும் அழைக்கின்றனர்.
மலை உச்சியிலுள்ள சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதும், அதை வழிபாட்டு முறையாக உட்கொள்வதும் பாரம்பரியமாக முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில், பாண்டி முனீஸ்வரர் கோயில், மலையாண்டி கருப்பசாமி கோயில் மற்றும் பிற முனியப்பன் கோயில்களில் விலங்குகளை பலியிடுவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையில் சமண கோயில்களும் உள்ளன.
அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில், அனைத்து மதங்களாலும் நடைமுறையில் உள்ள அதே நடைமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. பல்வேறு மதக் குழுக்களிடையே மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்வரை போராட்டம், ஊர்வலத்தை கட்டுப்படுத்த இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
இவ்வாறு குறிப்பிட்டார்.
தர்கா நிர்வாகம் தரப்பு கூறுவது என்ன
தர்கா நிர்வாகம் தரப்பு வாதம்:தர்கா அமைந்துள்ள பகுதி, கொடிமரம் மற்றும் அதற்கு செல்லும் பாதை, புது மண்டபம், நெல்லித்தோப்பு தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. மலையின் ஏனைய பகுதிகள் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என மதுரை சார்பு நீதிமன்றம் 1923 ல் உத்தரவிட்டது. இதை ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1931 ல் லண்டன் பிரிவி கவுன்சிலின் 5 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இதனடிப்படையில் நுாறாண்டுகளுக்கு மேல் அவரவர்களுக்குரிய பகுதிகளில் வழிபாடு நடத்தப்படுகிறது. அவரவர்களுக்கு எல்லைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து யாரும் வழக்கு தொடரவில்லை.
கோயில் நிர்வாகம் தரப்பு:மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து ஏப்.30 ல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
நேற்று நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவு வருமாறு:அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்என்றார்.
இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டுசில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும்உத்தரவிட்டார். இந்த சட்ட பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கை இரு நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.