ADDED : செப் 19, 2025 06:50 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (செப் 18) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
சிறுமியை மிரட்டி பாலியல் சீண்டல்
திருப்பூர், வளையன்காடு பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன ஊழியர் சசிகுமார், 33. இவர், கடந்த, 2022ம் ஆண்டில் திருப்பூரை சேர்ந்த, 11 வயது சிறுமி ஒருவரை ஆபாசமாக படம் பிடித்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி, அவரிடம் பாலியல் சீண்டல் செய்தார்.
இது குறித்து சிறுமி, தன் தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சசிகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்த வழக்கு திருப்பூர் விரைவு மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி கோகிலா, குற்றம்சாட்டப்பட்ட சசிகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமீலாபானு ஆஜரானார்.
சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வாழவச்சானுார் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் தனசேகர், 23; இவருக்கும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த 2024 நவ. 28ம் தேதி தனசேகர், மேல்மலையனுார் முருகன் கோவிலில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.
சிறுமி பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சென்றபோது 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அறிவுறுத்தலின்பேரில் அந்த சிறுமி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சிறுமியை கர்ப்பமாக்கிய தனசேகர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மகளுக்கு பாலியல் தொல்லை
சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்தவர் ஜான்சன், 45. இவர், 11 வயதுடைய தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 2021 ஆக., 15ல், ஆவடி மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருவள்ளூர் மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
நீதிபதி உமா மகேஸ்வரி, ஜான்சனுக்கு மூன்று பிரிவுகளின் கீழ், 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
20 ஆண்டு சிறை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வள்ளுவருக்கு 60, ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தளவாய்புரம் நல்லமங்கலத்தை சேர்ந்தவர் வள்ளுவர். டீக்கடைவைத்துள்ளார். 2023ல் இவரது கடைக்கு டீ வாங்க வந்த 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தளவாய்புரம் போலீசார் இவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் வள்ளுவருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.

