ADDED : ஜன 19, 2024 01:56 AM
சென்னை:அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக, அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்துக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், சனாதன தர்மத்தை, அதாவது ஹிந்து மதத்தை ஒழிப்பேன் என்ற உதயநிதி, இப்போது தாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என்று சொல்வது வரவேற்கத்தக்கது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் அமைவது குறித்த மக்களின் உற்சாகம், தாக்கம், உதயநிதியின் மாற்றத்தில் தெரிகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், உதயநிதி படித்து பொறுப்போடு பேச வேண்டும்.
-நாராயணன் திருப்பதி,
தமிழக பா.ஜ., துணைத் தலைவர்.
மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டியதில் உடன்பாடு இல்லை என, உதயநிதி கூறுவது, சிறுபான்மை மக்களை தாஜா செய்வதற்காக சொல்லப்படும் கருத்து. ஒரு இடத்தில் இருக்கும் கட்டடத்தை இடிக்காமல் புதிய கட்டடம் எப்படி கட்ட முடியும்? பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்பது போல் அமைச்சர் பேச்சு உள்ளது.
-- ராம ரவிக்குமார்,
இந்து தமிழர் கட்சி தலைவர்.
உதயநிதி கருத்து மத சண்டைகளை உருவாக்க துாண்டுகோலாக அமையும். தான் வகிக்கும் அமைச்சர் பதவியை மறந்து, மக்கள் மீது பற்றில்லாமல், மக்கள் கலவரத்தில் ஈடுபட வேண்டும். அதில் கீழ்த்தரமான அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பது, தி.மு.க.,வின் அழிவுக்கு ஆரம்பமாகும்.
- ராஜேஸ்வரி பிரியா
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர்.

