கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி பற்றி பேச தடை விதித்ததை நீக்க உதயநிதி மனு
கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி பற்றி பேச தடை விதித்ததை நீக்க உதயநிதி மனு
ADDED : ஜன 23, 2024 11:17 PM
சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, தனக்கு விதித்த தடையை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் உதயநிதி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் 'சனாதனத்துக்கான அர்த்தத்தை, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் பழனிசாமி தேடுகிறார்.
'கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஓளிந்திருக்க முடியாது. அந்த ஆடே காணாமல் போகும்போது, உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பாருங்கள்' என கூறியிருந்தார்.
தன் பெயருக்கு களங்கம், அவதுாறு ஏற்படுத்தும் வகையில் அறிக்கை இருப்பதாகவும், தன்னைப் பற்றி அவதுாறாக பேசவும், அறிக்கை வெளியிடவும் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும்; 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, அமைச்சர் உதயநிதிக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி, அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த பதில் மனு:
அவதுாறாக, பொய்யாக, வேண்டுமென்றே எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், பழனிசாமியின் தொடர்பு குறித்து, பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வந்துள்ளன.
இந்த வழக்கில் தனக்கு சிறிதும் தொடர்பில்லை என, அவர் கூற முடியாது. கோடநாடு வழக்கில் பழனிசாமியையும், சசிகலாவையும் சாட்சியம் கூற, குற்றம் சாட்டப்பட்டவர் அழைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
எனவே, என் அறிக்கையை பார்த்த மாத்திரத்தில் அவதுாறானது, பொய்யானது எனக் கூற முடியாது. பழனிசாமியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் வெளியிட்டதாகவும் கூற முடியாது.
ஏற்கனவே, பொது தளத்தில் இந்த வழக்கு குறித்த தகவல்கள் உள்ளன. கோடநாடு வழக்கு விசாரணைக்கு நான் காரணம் என, பழனிசாமி கூறுவது பொய்யானது. அரசியல் ஆதாயம் தேடி, அறிக்கை விடவில்லை. பொதுமக்கள் நலனை மனதில் வைத்து, வழக்கின் நிலை அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, அறிக்கை வெளியிடப்பட்டது.
எனவே, வழக்கு தொடுப்பதற்கு ஆரம்ப முகாந்திரம் இருப்பதை, பழனிசாமி நிரூபிக்கவில்லை. இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க, பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரியதால், விசாரணையை, பிப்ரவரி 26க்கு, நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.

