வருவாய் இழப்பு ஏற்படுத்திய சார் பதிவாளர்களுக்கு வலை
வருவாய் இழப்பு ஏற்படுத்திய சார் பதிவாளர்களுக்கு வலை
ADDED : ஜன 18, 2024 10:40 PM
சென்னை:விதிமுறைகளை மீறி பத்திரங்களை பதிவு செய்து, வருவாய் இழப்பு ஏற்படுத்திய சார் பதிவாளர்கள் குறித்த விபரங்களை திரட்ட, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிலங்களை அபகரிக்கும் மோசடி பத்திரங்களை, சில சார் பதிவாளர்கள் பதிவு செய்ததாகவும், பல இடங்களில் வகைபாடு, வழிகாட்டி மதிப்பு பார்க்காமல் பத்திரங்கள் பதிவு செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதில், 2021 மே மாதம் முதல் 2022 செப்., வரையிலான பதிவுகளை ஆய்வு செய்ய, சிறப்பு தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. சென்னை, கடலுார், கோவை, சேலம், திருநெல்வேலி மண்டலங்களில் சிறப்பு தணிக்கை நடந்தது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலத்திலும், 1,500க்கும் மேற்பட்ட பத்திரங்கள் தவறான முறையில் பதிந்தது சிறப்பு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தணிக்கையில் சிக்கிய சார் பதிவாளர்கள் பட்டியலை அனுப்ப, அந்தந்த மண்டல டி.ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, திருநெல்வேலி மண்டலத்தில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை துவங்கியுள்ளது. அடுத்தடுத்த மண்டலங்களிலும் இந்நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

