ரூ.6,000 எப்போ கிடைக்கும்? 6 லட்சம் பேர் காத்திருப்பு
ரூ.6,000 எப்போ கிடைக்கும்? 6 லட்சம் பேர் காத்திருப்பு
ADDED : ஜன 23, 2024 10:28 PM
சென்னை:கடந்த, 2023 டிசம்பரில், 'மிக்ஜாம்' புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நான்கு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக தலா, 6,000 ரூபாய் நிவாரண தொகையை, டிசம்பரில் தமிழக அரசு வழங்கியது.
இதில், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. அவர்கள் விரும்பினால், ரேஷன் கடைகளில் விண்ணப்பம் தருமாறும், வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது.
நான்கு மாவட்டங்களிலும் நிவாரண தொகை கேட்டு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களிடம் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கான புகைப்பட ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று, ஆய்வு செய்யும் பணியையும் அதிகாரிகள் முடித்து விட்டனர்.
இருப்பினும், வங்கி கணக்கில் நிவாரண தொகை இதுவரை செலுத்தப்படவில்லை. அந்த தொகையை விரைந்து வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

