அஜித்குமாரை அடிக்குமாறு போலீசாரிடம் சொன்ன 'சார்' யார்?
அஜித்குமாரை அடிக்குமாறு போலீசாரிடம் சொன்ன 'சார்' யார்?
ADDED : ஜூலை 05, 2025 03:24 AM

சென்னை : “காவல் துறையினருக்கு கவுன்சிலிங் வழங்க, தமிழக அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்,” என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறினார்.
அவர் அளித்த பேட்டி :
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை திருவொற்றியூரில், டியூஷனில் இருந்து வீடு திரும்பிய 17 வயது மாணவன், மழைநீரில் கால் வைத்ததால், மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
சாதாரண மழைக்கு கூட, சாலையில் நடக்க முடியவில்லை. ஆனால், சிங்கார சென்னை என மார்தட்டிக் கொண்டிருக்கிறார், முதல்வர். கூலிப்படை வைத்து கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
மடப்புரம் காவலாளி கொலை வழக்கில், சாட்சிகள் மிரட்டப்படுகின்றனர்.
அஜித்குமாரை தாக்குமாறு, போலீசாரிடம் சொன்ன அந்த சார் யார்? மற்ற திருட்டு வழக்குகளில், இதுபோல் கடும் நடவடிக்கை இருக்கிறதா? இந்த சம்பவத்திற்கு பிறகே, தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ளன.
அப்படியானால், இதுவரை தனிப்படைகளை, கூலிப்படைகளாக பயன்படுத்தியதாகத்தானே அர்த்தம்?
அஜித்குமார் குடும்பத்துக்கு, நேரடியாக சென்று முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய இழப்புக்கு, போனில், 'ஸாரி' சொன்னால் போதுமா?
எதிர்க்கட்சி ஆட்சி செய்யும்போது, இதுபோன்ற சம்பவங்களுக்கு முதல்வர் பொறுப்பு; இவர்கள் ஆட்சி செய்யும்போது அதிகாரிகள் பொறுப்பு என கூறுவது, எந்த விதத்தில் நியாயம்? காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது பற்றி, அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.