கருகும் பூக்கள்; கவலையில் விவசாயிகள்: முந்திரி, மா, காபி விளைச்சல் சரியும் ஆபத்து
கருகும் பூக்கள்; கவலையில் விவசாயிகள்: முந்திரி, மா, காபி விளைச்சல் சரியும் ஆபத்து
UPDATED : மார் 26, 2025 06:29 AM
ADDED : மார் 26, 2025 01:27 AM

தமிழகத்தில், அரியலுார், கடலுார் மாவட்டம், பண்ருட்டி ஆகிய இடங்களில் முந்திரி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அரியலுாரில் 1.25 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் மற்றும் அரசு வனப்பகுதிகளில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில், உடையார்பாளையம், நாச்சியார்பேட்டை, மணகெதி, செந்துறை, ஆண்டிமடம், தா.பழூர், பொன்பரப்பி, குவாகம். வரதராசன்பேட்டை, தென்னுார், காடுவெட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் முந்திரிக்கு தனிச்சுவை உண்டு.
பருவமழைக்கு பின், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முந்திரி பூத்து மார்ச், ஏப்., மே மாதங்களில் முந்திரி பழங்கள், கொட்டைகள் கிடைக்கும்.
சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, புயல், கடும் வெப்பம், பனிப்பொழிவு போன்ற காரணங்களால் முந்திரி மகசூல் குறைந்து, விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முந்திரி பூக்கள் கருகி வருகின்றன. இதனால் இந்த ஆண்டு முந்திரி மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முந்திரி பருப்புகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும், முந்திரி தோலில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைகளும் பாதிப்படைய நேரிடும். கிராம பகுதிகளில் வேலையிழப்பு ஏற்படுவதுடன், முந்திரி ஏற்றுமதி குறைந்து, அன்னிய செலாவணி ஈட்டும் திறனும் குறைய வாய்ப்புள்ளது. முந்திரிக்கு செய்த செலவுகள் வீணாகி விட்டதே என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
உடையார்பாளையம் விவசாயி பாலு கூறுகையில், ''ஒரு ஏக்கர் முந்திரியில் சராசரியாக 8 மூட்டை கொட்டைகள் கிடைக்கும். ''பூக்கள் கருகி வருவதால், ஏக்கருக்கு 2 மூட்டை கிடைப்பதே கடினம். இந்தாண்டு செலவு செய்த பணம் கிடைக்குமா என தெரியவில்லை,'' என்றார்.
- நமது நிருபர் குழு -