காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலி; தாய்லாந்து பிணைக்கைதி உடல் மீட்பு
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலி; தாய்லாந்து பிணைக்கைதி உடல் மீட்பு
UPDATED : ஜூன் 07, 2025 06:48 PM
ADDED : ஜூன் 07, 2025 06:34 PM

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதட்டமான சூழல் நிலவுகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 அப்பாவி பொது மக்களை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் துவங்கியது. கடந்த 20 மாதங்களாக காசாவில் தாக்குதல் நடந்து வருகிறது.
பக்ரீத் பண்டிகை நாளான இன்றும் காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர்.
பிணைக்கைதி உடல் மீட்பு
ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியான நட்டாபாங் பின்டா என்பவரின் உடலை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்து உள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

