பிரசார நிதி ஊழல் வழக்கு 'மாஜி ' அதிபருக்கு 5 ஆண்டு சிறை
பிரசார நிதி ஊழல் வழக்கு 'மாஜி ' அதிபருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 25, 2025 11:22 PM
பாரிஸ்: பி ரசார நிதி ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபராக 2007 முதல் 2012 வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. கடந்த 2007ல் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு சட்டவிரோத வெளிநாட்டு நிதியைப் பெற்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
அப்போதைய லிபிய அதிபர் சர்வாதிகாரி முயம்மர் முகமது கடாபியிடமிருந்து முறைகேடாக நிதி பெற்றதாகவும், அதற்காக வேறு சிலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னாள் அதிபர் சர்கோஸி மீதான சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, நீதிபதி ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இத்தகைய குற்றச்சாட்டில் சிறை தண்டனைக்கு ஆளாக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக இருந்தாலும், சர்கோஸி சிறையில் இருந்தபடி தான் செய்ய முடியும் என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.