மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: 25 பேர் பலி
மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: 25 பேர் பலி
UPDATED : மார் 28, 2025 03:33 PM
ADDED : மார் 28, 2025 12:50 PM

சகாய்ங்: மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரகண்ட்டிலும், வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. குறிப்பாக, தாய்லாந்தின் பாங்காங்கில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கட்டடத்தின் கீழே இருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த கட்டிட இடுபாடுகளில் 40 ஊழியர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல, பல இடங்களிலும் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
20 பேர் பலி
இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். மண்டலே நகரில் உள்ள மசூதியில் இருந்தவர்களும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 'மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கவலையளிக்கின்றன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன். அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். இதற்காக, எங்களின் அதிகாரிகளை தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, இரு நாடுகளுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்,' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.