/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கன்னட அபிமானி ஆட்டோ ஓட்டுநர் சவுமியா
/
கன்னட அபிமானி ஆட்டோ ஓட்டுநர் சவுமியா
ADDED : டிச 01, 2025 06:06 AM

இன்றைய காலத்தில் பெண்கள் இல்லாத தொழிலே இல்லை என சொல்லலாம். ஆட்டோ முதல் விமானம் வரை அனைத்தையும் ஓட்டி அசத்துகின்றனர். இவர்களின் திறமைக்கு ஈடு இணையே இல்லை என சொல்லலாம்.
சாலையில் ஆட்டோ ஓட்டுவது எளிதானது அல்ல. எப்போது எந்த இடத்தில் வாகனங்கள் புகுந்து செல்லுமோ என்ற அச்சத்திலே செல்ல வேண்டும். ஒரு சிக்னலை தாண்டுவதற்குள் பல சிரமங்களையும், வசவுகளையும் தாங்கி கொள்ள வேண்டி இருக்கும்.
அப்படிப்பட்ட ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்பவர் தான், மைசூரு விஜயநகரை சேர்ந்த சவுமியா, 35. இவர் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற மைசூரு நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல; கன்னட அபிமானியும் கூட.
கன்னட கொடி இவர் கன்னட மொழி மீது கொண்ட காதல் மகத்தானது. இதை, இவரின் செயல்பாடுகள் மூலம் நம்மால் அறிய முடியும். இவர் தனது காக்கி நிற சீருடையில் கூட மஞ்சள், சிவப்பு நிறம் கொண்ட கன்னட கொடி போல வடிவமைத்து உள்ளார். அதுமட்டுமின்றி, கன்னட கொடியை எப்போதும் கழுத்தில் அணிந்தவாறு தான் ஆட்டோ ஓட்டுவார்.
இவரது ஆட்டோவிலும் கன்னட தாய் புவனேஸ்வரியின் உருவப்படத்தை வைத்து வழிபடுகிறார். இவர் தனது தாய் மொழிக்கு தரும் மரியாதையை பார்த்து பலரும் அவரை பாராட்டி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கன்னட ராஜ்யோத்சவாவின் போது, ஆட்டோ ஸ்டாண்டுகளில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்று, தொண்டுகள் செய்வார். அப்போது, தனது ஆட்டோவில் கன்னட கொடியை கட்டி, கன்னட பாடல்களை ஒலிக்க செய்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்.
இந்த கொண்டாட்டங்களில் புவனேஸ்வரி தாயின் போஸ்டர்களை வைத்து வழிபடுவது வழக்கம்.
போஸ்டர் வழிபாடு கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் புவனேஸ்வரி தாயின் போஸ்டர்களை சிலர் துாக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இதை பார்த்த சவுமியாவுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. இதனால், அந்த போஸ்டர்களை பத்திரமாக எடுத்து வந்து, தனது வீட்டிலுள்ள சாமி அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வருகிறார். இதையறிந்த பலரும் சவுமியாமை பாராட்டி வருகின்றனர்.
இவர் தனது தாய் மொழிக்கு தரும் மரியாதையை பார்த்தாவது, இளம் தலைமுறையினர் தங்கள் தாய் மொழியில் பேசவும், வாசிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
- நமது நிருபர் -:

