/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பீதரின் முதல் பெண் விமானி பூஜா சதங்கி
/
பீதரின் முதல் பெண் விமானி பூஜா சதங்கி
ADDED : ஜூன் 16, 2025 07:15 AM

கர்நாடகா - தெலுங்கானா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் அமைந்துள்ளது பீதர் மாவட்டம். வளர்ச்சியிலும், கல்வியறிவிலும் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. பீதரை சேர்ந்த பெண்கள் கூலி வேலைக்காக பெங்களூரு, ஹைதராபாத் செல்கின்றனர். ஒரு சில பெண்கள் மட்டுமே கல்வி, வேலையில் சாதித்து உள்ளனர். இவர்களில் ஒருவர் பூஜா சதங்கி. விமானம் ஓட்டும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து விமானி ஆகி உள்ளார்.
பூஜா சதங்கியின் தந்தை சரோஜ்குமார். இவர் ஒடிசாவை சேர்ந்தவர். தாய் சாந்தாஸ்ரீ, கர்நாடகாவின் ராய்ச்சூரை சேர்ந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். பீதர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் குருபாதப்பா நாகரம்பள்ளியின் சர்க்கரை ஆலையில் சரோஜ்குமார் தலைமை கணக்கராக வேலை செய்தால், பூஜா பிறந்தது, வளர்த்தது, படித்தது எல்லாமே பீதரில் தான்.
பீதரில் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, தார்வாடில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.யு.சி., படித்தார். பின், பெங்களூரு சென்று பி.பி.ஏ., முடித்தார். பூஜாவுக்கு இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் கடந்த 2021ல் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், அவரது ஆசை நிறைவேறாமல் போனது. விமான துறையில் பணியாற்றிய நண்பர்கள் மூலம், விமானி ஆக வேண்டும் என்ற ஆசை பூஜாவுக்கு ஏற்பட்டது. பெற்றோரிடம் கூறிய போது சம்மதம் தெரிவித்தனர்.
பெங்களூரு சென்று விமான பயிற்சியில் சேர்ந்து தேர்வு எழுதினார். பின், ஹரியானா மாநிலம் திவானியில் உள்ள விமான பயிற்சி பள்ளியில், இரண்டு வருடம் பயிற்சி எடுத்து 200 மணி நேரம் விமானம் ஓட்டினார். விமானியாக மாற குறைந்தபட்சம் 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். தற்போது வணிக விமானியாக மாற ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்.
தனது பயணம் குறித்து பூஜா கூறியதாவது:
என் பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தனர். அவர்களின் ஒத்துழைப்பு, ஊக்கத்தால் தான் என்னால் விமானி ஆக முடிந்தது. எந்த தொழிலும் எளிதானது இல்லை. எதையும் சாதிக்க கடினமாக உழைக்க வேண்டும். நானும் பல சவால்களை சந்தித்து இருக்கிறேன்.
மற்றவர்கள் செய்ததை போலவே நாமும் செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நமக்கு என்று தனி பாதை அமைத்து கொள்ள வேண்டும். இப்போது தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. அனைத்து தகவல்களும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் கற்று கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் உள்ளனர். பெண் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. பீதரில் இருந்து முதல் பெண் விமானி என்ற பெயர் பெருமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -