ADDED : ஜூன் 27, 2025 06:53 AM

குடகுவின் கோனிகொப்பாவில் உள்ள கூர்க் பப்ளிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அலை சறுக்கு போட்டியில் ஆர்வமாக இருந்தார். குடகில் இதற்கான வாய்ப்பு இல்லாதபோது, கோடை காலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் உள்ள மந்த்ரா சர்ப் கிளப்பில் சேர்ந்து பயிற்சியை துவக்கினார். இந்த கிளப், நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் அலை சறுக்கு கிளப்பாகும்.
தற்போது 'சர்பிங் சுவாமி பவுண்டேஷன்' என்ற தனியார் தொண்டு அமைப்பு, இவருக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த அமைப்பு, நாடு முழுதும் கடல் அலை சறுக்கு போட்டியை ஊக்குவித்து வருகிறது. கடந்தாண்டு மங்களூரில் நடந்த, 'இந்தியன் ஓபன் சர்பிங்' போட்டியில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றார். அரை இறுதி சுற்று வரை சென்றார்.
இது தவிர நாடு முழுதும் நடந்த பல்வேறு அலை சறுக்கு போட்டியில் பங்கேற்று, தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இது அனைத்தும் அவரின் திறமை, அர்ப்பணிப்பு, விளையாட்டு மீதான ஆர்வத்தால் சாத்தியமானது.
கோடை காலத்தில் பெரும்பாலான மாணவ - மாணவியர் வீட்டில் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பதும், நண்பர்களுடன் விளையாடுவதுமாக இருப்பர்.
ஆனால், ஆத்யா, நடப்பாண்டு கேரள மாநிலம், வர்கலாவில் நடந்த சர்வதேச அலை சறுக்கு திருவிழாவில், பெண்கள் பிரிவில் பங்கேற்றார். அலைகள் மீது ஆத்யா செய்த சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
அதுபோன்று, மங்களூரில் 'திபி ஜப்ரிக்ஸ் க்ரோம் பாட்ரோல்' அலை சறுக்கு போட்டியில், 16, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்திய தடகள அரங்கில், வளர்ந்து வரும் ஒரு விளையாட்டை தேர்வு செய்து, தன்னம்பிக்கையுடன் ஆத்யா சிறந்து விளங்குகிறார். சமீபத்தில் இவரின் சாதனையை பாராட்டி, இவரின் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் விருது வழங்கி கவுரவித்தார்.
பின், அவர் பேசுகையில், ''ஆத்யாவை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் இன்னும் தேசிய, சர்வதேச அளவில் அலை சறுக்கில் பல சாதனைகள் புரிய வேண்டும். அவரின் பயணத்தை நாங்கள் ஆதரிப்போம்,'' என்றார்.